கடலூர் முதுநகரில் குப்பை கொட்டுவதை தடுக்க சூலம் வைத்ததால் பரபரப்பு


கடலூர் முதுநகரில் குப்பை கொட்டுவதை தடுக்க சூலம் வைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் குப்பை கொட்டுவதை தடுக்க சூலம் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் பழைய போலீஸ் நிலையம் அருகில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்த பகுதி வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்ததாகும். எனவே இந்த இடத்தில் குப்பை கொட்ட தடை செய்யப்பட்ட பகுதி என்று கடலூர் மாநகராட்சி அறிவிப்பு பேனர் ஒன்றை வைத்துள்ளது.

அதில் இங்கு குப்பை கொட்டாதீர்கள், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல் சிலர் அங்கு குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

சூலம் வைத்ததால் பரபரப்பு

இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று காலை பள்ளம் தோண்டப்பட்டு, சிமெண்டால் பீடம் அமைத்து 5 அடி உயரமுள்ள சூலம் நடப்பட்டுள்ளது. மேலும் அந்த சூலத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பூமாலை சாத்தப்பட்டது.

இது தவிர சிமெண்டால் ஆன கல்லிற்கும் மஞ்சள், குங்குமம் பூசப்பட்டது. அதன் அருகில் சாமி படம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதற்கு வேப்பமர இலை மாலை அணிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்காக சூலம் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story