கடலூரில், கலெக்டர் பாலசுப்பிரமணியம் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்


கடலூரில், கலெக்டர் பாலசுப்பிரமணியம் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
x

சுதந்திர தின விழாவையொட்டி கடலூரில் நாளை (திங்கட்கிழமை) கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர்

சுதந்திர தின விழா

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இதன்படி சுதந்திர தின விழாவை கொண்டாட பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் 3 நாட்கள் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் நாளான நேற்று கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வீடுகள், அரசு, தனியார் அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மின்னொளியிலும் மூவர்ணங்கள் ஜொலித்தன. இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) சுதந்திர தின விழாவை கொண்டாட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கலெக்டர் கொடி ஏற்றுகிறார்

மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மூவர்ண பலூன்களையும் பறக்க விடுகிறார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்களை வழங்குகிறார். அதன்பிறகு நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்குகிறார். அதையடுத்து தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியும், மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

வெடிகுண்டு சோதனை

விழா நடக்கும் இடத்தில் மேடை அமைக்கும் பணி, தியாகிகள் அமரும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் கூப்பர் மூலம் வெடிகுண்டு சோதனையிடப்பட்டது. இது தவிர மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகளின் உடமைகளை சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 32 சோதனைச்சாவடிகளிலும் வெளி நபர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

1,900 போலீசார் பாதுகாப்பு

தங்கும் விடுதிகளிலும் சந்தேகப்படும்படியாக வெளி நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா? என்று சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர 47 கடலோர கிராமங்களிலும் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் படகு மூலம் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் முன்னிலையில் 7 உட்கோட்டங்களிலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story