கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு
கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்க எண்களில் பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து இரட்டை இலக்கை எண்களை தொட்டது. அதாவது பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 13 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய் தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த கடலூர், சிவக்கம், விருத்தாசலம், கம்மாபுரத்தை சேர்ந்த 5 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நல்லூர், கடலூர், நெய்வேலி என்.எல்.சி.யை சேர்ந்த 8 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்து 348 ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் வரை 73 ஆயிரத்து 400 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 7 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 43 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும், 4 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.