கடலூரில் பாதாள சாக்கடை மூடி உடைந்து வீடுகளை சூழ்ந்திருக்கும் கழிவுநீர் குடலை புரட்டும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கடலூரில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் வீடுகளை சூழ்ந்திருப்பதால் மக்கள் அவதியடைகின்றனர்.
சுத்தம் சோறு போடும் என்பார்கள். எனவே நாம் மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள பகுதிகளையும் நாம் பேணி பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நாம் நோய் நொடியின்றி சீறும் சிறப்புடன் வாழ முடியும். அப்படி வாழ்வதற்காக நிறைய முயற்சிகளை தமிழக அரசு எடுத்து இருக்கிறது.
கழிவுநீர் கால்வாய்
அதில் ஒன்றாக தமிழக அரசு செய்திருப்பதுதான் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி. இந்த பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் மூலம் வீடுகளில், கடைகளில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டதும், வெளியேற்றப்படுகிறது.
இதனால் நம்முடைய இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் நம்முடைய சுகாதாரமும் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் கடலூர் மாநகரில் மொத்தமுள்ள 45 வார்டுகளில், சுமார் 35 வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றும் வகையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாதாள சாக்கடை குழாய்கள் மற்றும் மூடிகள்(மேன்கோல்) முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
தொடர் புகார்
இதனால் மாநகரில் ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதது போல், எங்கு பார்த்தாலும் கழிவுநீர் தான் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கடலூர் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடைந்தது. அதனை சரி செய்யக் கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
இதனால் தற்போது மின் மோட்டாரில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல், அதில் இருந்து கழிவுநீர் ஆறாக ஓடி, அருகில் உள்ள வீடுகளை சுற்றிலும் குளம்போல் தேங்கி. கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கிறது. கொசுத்தொல்லையாலும், குடலை புரட்டும் அளவில் வீசும் துர்நாற்றத்தாலும் அப்பகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள்.
தொற்று நோயால் பாதிப்பு
ஒரு வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் வீசும் துர்நாற்றத்தையே தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை வழியாக வெளியேறும் ஒட்டுமொத்த கழிவுநீரால் ஏற்படும் கடும் துர்நாற்றத்துக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் கழிவுநீர் வெளியேறும் இடத்தின் அருகிலேயே அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர். பாதாள சாக்கடை மூடி எப்போது சீரமைக்கப்படுகிறதோ, அதன் பிறகே நாங்கள் குழந்தைகளை அனுப்புகிறோம் என கூறுகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
நடவடிக்கை வேண்டும்
புதுவண்டிப்பாளையம் ராசி நகர் தரணி: பாதாள சாக்கடை மூடி உடைந்த இடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீடுகளின் பின்புறம் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் எனது மகன், பேத்தி உள்ளிட்ட அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம். துர்நாற்றத்தால் வீடுகளில் இருக்க கூட முடியவில்லை. அதனால் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாப்பிட கூட முடியவில்லை
சந்திரா: வீட்டை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால், அடிக்கடி எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றாலும், உரிய பரிசோதனை செய்யாமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பி விடுகின்றனர். இதேபோல் தேங்கி நிற்கும் கழிவுநீரால், இப்பகுதியில் வசிக்கும் பலர் அடிக்கடி காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால், வீடுகளில் அமர்ந்து நிம்மதியாக சாப்பிட கூட முடியவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி, பாதாள சாக்கடை மூடியை விரைந்து சீரமைக்க வேண்டும்.
குழந்தைகளை அனுப்ப மறுப்பு
அங்கன்வாடி குழந்தையின் பெற்றோர் கூறுகையில், இந்த அங்கன்வாடியில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை மூடி உடைந்தது. அதனை சரி செய்யக்கோரி பலமுறை புகார் அளித்தும், இதுவரை ஒருவர் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அங்கன்வாடியில் குழந்தைகளால் இருக்க முடியவில்லை. சிலர் தொற்று நோயால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக எங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப விருப்பமில்லை. எனவே உடைந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய வேண்டும் என்றனர்.