கடலூரில் பதற்றமான பகுதிகளில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பும் நடத்தினர்
கடலூரில் பதற்றமான பகுதிகளில், மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர். அப்போது துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பும் நடத்தினர்
கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் உதவி கமாண்டர் வெங்கட்ராமன் முன்னிலையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அங்கு முகாமிட்ட அவர்கள் நேற்று காலை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து, உட்கோட்டத்தில் பதற்றமான பகுதிகள் எவை? அடிக்கடி பிரச்சினை, கலவரம், சாதி மோதல்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெறும் பகுதிகள் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கரிடம் கேட்டறிந்தனர்.
துப்பாக்கியுடன் அணிவகுப்பு
அதற்கு அவர் உட்கோட்டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளான தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிப்பிட்டு தகவல் தெரிவித்தார். கடந்த 2018-ம் ஆண்டு சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் வருகிற 4-ந்தேதி கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவ வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய பகுதியிலும் பதற்றமான இடங்கள் குறித்த விவரங்களை அவர்கள் சேகரித்தனர்.
அதன்படி மத்திய அதிவிரைவுபடையினர் கடலூர் தேவனாம்பட்டினத்திற்கு உள்ளூர் போலீசாருடன் சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அங்கு சென்ற அவர்கள் தெருக்களில் துப்பாக்கி ஏந்தியபடி அணி வகுப்பு நடத்தினர். அப்போது கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம், கருவிகள், நவீன எந்திரங்கள் ஆகியவற்றுடன் அணிவகுப்பு நடத்தினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஏதோ பிரச்சினை என்று கருதி வேடிக்கை பார்த்தனர். அதன்பிறகு தான் அவர்களுக்கு இது கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அதிவிரைவு படையினர் நடத்திய அணிவகுப்பு என்று தெரிந்தது.
7 நாட்கள் முகாம்
இருப்பினும் இந்த திடீர் அணிவகுப்பால் கலவரக்காரர்கள் சற்று பீதி அடைந்தனர். இந்த மத்திய அதிவிரைவு படையினர் கடலூர் மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு, சிதம்பரம். நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, விருத் தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட உட்கோட்ட பகுதிகளுக்கும் சென்று மிகவும் பதற்றமான, பதற்றமான பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து இந்த அறிக்கையை தமிழக டி.ஜி.பி.க்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்ப உள்ளனர்.
கலவரங்களை மாநில போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், மத்திய அதிவிரைவு படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைக்கும். அப்போது அவர்கள் கலவர பகுதிக்கு விரைந்து வந்து, கலவரத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்காக தான் இந்த பதற்றமான பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக மத்திய அதிவிரைவு படை கமாண்டர் விஜயன் தெரிவித்தார். அணிவகுப்பின் போது கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
கோவையில் கார் குண்டு வெடித்த சம்பவத்திற்கு பிறகு, அங்கு இந்த மத்திய அதிவிரைவு படை போலீசார் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.