கடலூரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தொடங்கி வைத்தார்
கடலூரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. மேலும் பள்ளிகளில் மாணவர்களிடையே வன்கொடுமை தடுப்பு குறித்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு பேரணி
அந்த வகையில் கடலூரில் நேற்று குழந்தைகள் வன்கொடுமை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதிசாலை வழியாக புதுநகர் போலீஸ் நிலையம் வரை சென்றது. பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.