கடலூரில் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரெயில்களில் பயணிக்க கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் நேற்று மத்திய-மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமாரசாமி, காசிநாதன், கருணாகரன், பாலு.பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் வட்ட செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் பழனி, அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணை தலைவர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் ராமலிங்கம், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வரதராஜன் மற்றும் கண்ணன், சுகுமாறன், தேவராஜ், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் கூட்டமைப்பு பொருளாளா் குழந்தைவேலு நன்றி கூறினாா்.