கடலூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அமைச்சு பணியாளர் சாவு
கடலூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அமைச்சு பணியாளர் உயிரிழந்தார்.
சென்னை சூளைமேடு ஆர்.இ. குடியிருப்பை சேர்ந்தவர் வீரவேல் மகன் மகேஸ்வரன் (வயது 20). டிப்ளமோ முடித்துள்ள இவர் காவல்துறை அமைச்சு பணியாளராக பணியில் சேர்ந்து, ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் தகவல் பதிவு உதவியாளராக பயிற்சி முடித்தார். அதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ஆணைக்குப்பத்தில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இவர் நீதிபதிகள் குடியிருப்பு சாலை வழியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் அங்குள்ள சிறிய பாலத்தின் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி அவரது தாய் மீனாம்பாள் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.