கடலூரில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கடலூர் வண்ணாங்குட்டை சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சி பகுதியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு வார்டுகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், இந்த பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பணிகள் முடிந்ததாக தெரியவில்லை.
மழைக்காலத்திற்குள் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மாநகரில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வடிய வசதியின்றி உள்ளது. கழிவு நீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம் மன் கோவில் தெரு வண்ணாங்குட்டை செல்லும் சாலையில் கழிவுநீர் வடிகால் தாழ்வான நிலையில் அமைக்கப் பட்டு உள்ளது. இதனால் கழிவு நீர் அனைத்தும் வடிய வசதியின்றி மெயின்ரோட்டிலேயே குட்டை போல் தேங்கி நிற்கிறது.
துர்நாற்றம்
மழையும் அவ்வப்போது பெய்து வருவதால், மழைநீருடன், கழிவுநீரும் கலந்து நிற்கிறது. இதை அவ்வப்போது மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து வருகிறது. ஆனால் மறுநாளே மீண்டும் கழிவுநீர் தேங்கி விடுகிறது. அதில் துர்நாற்றமும் வீசி வருவதால் சாலையை கடந்து செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதி அடைந்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் வேகமாக செல்லும் போது, மாணவர்களின் மேல் கழிவு நீரை அடித்து விட்டு செல்கின்றனர். இதனால் மாணவர்களின் சீருடை வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் ஆபத்து ஏற்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆகவே மாநகராட்சி மேயர், ஆணையாளர் இந்த இடத்தை பார்வையிட்டு, இங்கு கழிவுநீர் நிரந்தரமாக தேங்காத வகையில், அந்த சாலையையும், கழிவுநீர் கால்வாயையும் உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.