தேவர்சோலையில் விதிகளை மீறி 2 மாடுகளை கொண்டு சென்ற லாரி பறிமுதல்-அதிகாரிகள் நடவடிக்கை
தேவர்சோலையில் விதிமுறைகளை மீறி கொண்டு சென்றதால் மினி லாரி, 2 மாடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்
தேவர்சோலையில் விதிமுறைகளை மீறி கொண்டு சென்றதால் மினி லாரி, 2 மாடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விதிமுறைகளை மீறி
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கான விதிமுறைகள் அமலில் உள்ளது. வாகனங்களில் போதிய இடவசதி இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உணவு, தண்ணீர் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவர் சோலை போலீசார் பஜாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கூடலூரில் இருந்து ஒரு மினி லாரியில் போதிய இடைவெளி இல்லாமல் 2 மாடுகள் கொண்டு வருவதை கண்டனர். இதை தொடர்ந்து போலீசார் மினி லாரியை நிறுத்தி ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடு வட்டத்திலிருந்து இறைச்சிக்காக தேவர் சோலைக்கு மாடுகள் கொண்டு வருவது தெரிய வந்தது. ஆனால் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பாக கால்நடை மருத்துவரிடம் சான்று பெறவில்லை.
மினி லாரி- மாடுகள் பறிமுதல்
இதைத் தொடர்ந்து மினி லாரி மற்றும் 2 மாடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மசினகுடி அருகே மாவனல்லாவில் உள்ள காப்பகத்தில் மாடுகள் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, கால்நடைகளை வாகனங்களில் அழைத்து செல்லும்போது போதிய இடைவெளி இருக்க வேண்டும். கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். இனி வரும் நாட்களில் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.