கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் உள்இடஒதுக்கீடு
கல்வி, வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சவரத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மருத்துவகுல சவரத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன், பொருளாளர் ராமு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒடிசா மாநிலத்தை போல், கொத்தடிமை சட்டத்தின் கீழ் சட்ட வழி பாதுகாப்பு வழங்க தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தை போல், தமிழகத்தில் முடிதிருத்துவோர் நல வாரியம் என்பதை முடி திருத்துவோர் நல கழகம் என்று அமைக்க வேண்டும். மருத்துவ சமுதாய மக்களுக்கு மருத்துவர் என்று ஒரே பெயரில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், முடி திருத்தும் கடை நடத்துபவர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
பா.ம.க. நகர செயலாளர் காஜாமைதீன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை அமோகமாக உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட லாட்டரி வியாபாரிகள் உள்ளனர். எனவே, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.