ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியில் 282 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது


ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியில்   282 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
x

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியில் 282 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஈரோடு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியில் 282 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடிக்கும் மேல் உபரிநீர் திறக்கப்படுகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

125 வீடுகளை புகுந்தது

வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி புதிய பஸ் நிலையம், அருகே உள்ள நேதாஜி நகர், காவிரி நகர், காவிரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பசுவேஸ்வரர் வீதி, பவானி பழைய பாலம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள 125-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்து செல்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் தினசரி மார்க்கெட் பகுதியை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பவானியில் உள்ள மயானத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பிணங்களை புதைக்க, மற்றும் தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மயான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

வீடு இடிந்து விழுந்தது

வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி பூக்கடை அருகே உள்ள பாலக்கரை வீதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான சந்திரசேகர் என்பவரின் வீடு நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. நல்லவேளையாக அந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி அந்த பகுதியில் உள்ள முகாமில் தங்கி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செல்லும் பழமையான பாலம் பொதுமக்கள் நலன் கருதி மூடப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆய்வு

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கோபி ஆர்.டி.ஒ. திவ்யதர்ஷினி, பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், ஆணையாளர் தாமரை, நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

மேலும் பவானி காவிரி வீதியில் தயார் நிலையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி காவிரி ஆற்றங்கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொடுமுடி

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்ககால் கொடுமுடி இலுப்பை தோப்பு பகுதி, வடக்கு தெரு, புது மாரியம்மன் கோவில் பின்புறத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 26 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு 2 தனியார் திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவ்வாறு தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு 3 வேளை உணவு, அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் அனைத்து பகுதிகளிலும் யாரும் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு்ள்ள முகாமையும், அமைக்கப்பட்ட மருத்துவ முகாமையும் சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகேஸ்வரன் பார்வையிட்டார்.

நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சாமி கும்பிட வந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் கோவில் அருகில் இருந்தபடியே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்த்து சென்றனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி ஆற்று பகுதியில் மீனவர் குடியிருப்பு, காமராஜர் வீதி, பழைய மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்து வந்தவர்கள் மேடான பகுதியில் உள்ள தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் அம்மாபேட்டை மற்றும் நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் நேற்று முன்தினம் முதலே அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் சிங்கம்பேட்டை புதுகோட்ரஸ், சித்தார், காடப்பநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுக்கு செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அம்மாபேட்டை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே காரணம்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு இருந்துதான் புகளூரான் வாய்க்கால் பிரிந்து செல்கின்றது. ஈரோடு மாவட்ட எல்லை வரை காவிரி ஆறும், புகளூரான் வாய்க்காலும் அருகருகே செல்கின்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக கரையை தாண்டி காவிரி ஆற்று நீரானது புகளூரான் வாய்க்காலில் கலந்து சென்றது. இதனால் கரையே தெரியாத அளவுக்கு தண்ணீர் பரந்து விரிந்து சென்றது.

ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி காவிரி ஆற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கூட மைதானத்தில் தண்ணீர் புகுந்தது. நேற்று விடுமுறை என்பதால் மாணவ- மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊஞ்சலூர் அருகே உள்ள கொளாநல்லி ஊராட்சிக்கு உள்பட்ட சத்திரப்பட்டியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 47 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து 47 வீடுகளை சேர்ந்த 140-க்கும் மேற்பட்டவர்களை வருவாய்த்துறையினர் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆற்றல் பவுண்டேசன் சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கொடுமுடி தாசில்தார் முன்னிலையில் கொளாநல்லி ஊராட்சி சார்பில் செய்யப்பட்டு இருந்தது.


Next Story