ஈரோடு மாவட்டத்தில்45 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 45 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
காய்ச்சல் சிறப்பு முகாம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா எச்.3 என்.2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உடல் வலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், வாந்தி போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது. இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிக அளவில் தாக்கி வருகிறது. இந்த நிலையில் இன்புளூயன்சா காய்ச்சலை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் நேற்று தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது.
45 இடங்களில்...
ஈரோடு மாநகர் பகுதியில் புதுமைக்காலனியில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும், அகத்தியர் வீதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நேற்று காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். குறிப்பாக முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சளி, காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் ஈரோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை கொடுமுடி, பவானி, கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் மொத்தம் 45 இடங்களில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது.