ஈரோடு கிழக்கு தொகுதியில்கலெக்டர்-எம்.பி., எம்.எல்.ஏ. ஓட்டுப்போட்டனர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கணேசமூர்த்தி எம்.பி., சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. ஆகியோர் ஓட்டுப்போட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கணேசமூர்த்தி எம்.பி., சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. ஆகியோர் ஓட்டுப்போட்டனர்.
கலெக்டர் ஓட்டுப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி ஈரோடு சம்பத்நகர் அம்மன் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார். அவரது மனைவி கே.எம்.பிரசிதா சபரியும் ஓட்டுப்போட்டார்.
அதன்பிறகு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக தயார் செய்யப்பட்டு உள்ளது. 5 இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்தபோது எந்திர கோளாறு ஏற்பட்டது.
அதன்பிறகு உடனடியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டு சரிசெய்யப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து வாக்காளர்களை பாதுகாத்து கொள்வதற்காக பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
தயார் நிலை
வாக்குச்சாவடிகளில் எந்திர கோளாறு ஏற்பட்டால், உடனடியாக மாற்றி அமைக்கும் வகையில் 20 சதவீத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், 30 சதவீதம் 'வி.வி.பேட்' கருவிகள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 238 வாக்குச்சாவடிகளையும் வெப் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
எம்.பி.-எம்.எல்.ஏ.
ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. ஈரோடு சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதேபோல் அதே வாக்குச்சாவடி மையத்தில் மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. தனது வாக்கை பதிவு செய்தார்.
இதேபோல் தி.மு.க. தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஈரோடு கலைமகள் தொடக்க பள்ளிக்கூடத்திலும், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் சூரம்பட்டி நால்ரோடு பாரதி வித்யாபவன் பள்ளிக்கூடத்திலும், காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள அருள்நெறி பள்ளிக்கூடத்திலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.