ஈரோடு வியாபாரி வீட்டில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சங்ககிரியில் மீட்பு


ஈரோடு வியாபாரி வீட்டில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சங்ககிரியில் மீட்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 2:55 AM IST (Updated: 17 Jun 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வியாபாரியின் வீட்டில் திருடப்பட்ட மோட்டார்சைக்கிளை போலீசார் சங்ககிரியில் மீட்டனர். மேலும் போலீசாரை திசை திருப்பும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனரா? என விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு

ஈரோடு வியாபாரியின் வீட்டில் திருடப்பட்ட மோட்டார்சைக்கிளை போலீசார் சங்ககிரியில் மீட்டனர். மேலும் போலீசாரை திசை திருப்பும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனரா? என விசாரித்து வருகின்றனர்.

கொள்ளை

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 38). செல்போன் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பிருந்தா (36). பரமேஸ்வரன் வியாபாரத்துக்காக மராட்டிய மாநிலம் புனேவுக்கும், பிருந்தா சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள உறவினர் வீட்டு கோவில் விசேஷத்திற்காகவும் சென்றிருந்தனர்.

இதைத்தொடர்ந்து புனேவில் இருந்து பரமேஸ்வரன் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் மற்றும் வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

மோட்டார் சைக்கிள் மீட்பு

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சங்ககிரியில் பைபாஸ் ரோட்டில் கேட்பாரற்று மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அது பரமேஸ்வரன் வீட்டில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீரப்பன்சத்திரம் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மீட்டு ஈரோட்டுக்கு கொண்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களா? அல்லது போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக சங்ககிரியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேறு ஊருக்கு தப்பி சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story