ஈரோட்டில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஈரோட்டில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடக்க பள்ளிக்கூடம்
ஈரோடு செல்லபாஷா வீதியில் அரசு நிதி உதவி பெறும் தொடக்க பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஆங்கில வழி கல்வியில் அதிகமாக மாணவ -மாணவிகள் படித்தனர்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டன. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் 359 மாணவ- மாணவிகளும், ஆங்கில வழி கல்வியில் 361 மாணவ- மாணவிகளும் என 720 பேர் சேர்ந்து இருந்தனர்.
50 சதவீதம்
இந்த நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் ஆங்கில வழி கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவ- மாணவிகளையும், ஏற்கனவே பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிகளையும் பெற்றோர் அனுமதியின்றி பள்ளிக்கூட நிர்வாகமே தமிழ் வழி கல்வியில் சேர்த்து, அதற்கான பாட புத்தகங்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு உள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியர் மாணவ- மாணவிகளின் பெற்றோர்களிடம், 'பள்ளிக்கூடத்தில் சேர்ந்த மாணவ- மாணவிகளில் 50 சதவீதம் பேர் தமிழ் வழி கல்வியிலும், 50 சதவீதம் பேர் ஆங்கில வழி கல்வியிலும் படிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதைத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளோம்' என்றார்.
முற்றுகை
இதற்கு பெற்றோர், 'எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது இந்த விவரங்களை கூறாமல், ஆங்கில வழி கல்வி என சேர்த்துவிட்டு, தற்போது தமிழ் வழி கல்வியில் மாற்றியதை ஏற்க முடியாது' எனக்கூறி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி வந்து இந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வரை நாங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, ஆங்கில வழி கல்வியில் சேர்த்த மாணவ- மாணவிகளை தொடர்ந்து ஆங்கில வழி கல்வியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.