கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சியினர், பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தினர்
எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர், பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாநகர புதிய பஸ் நிலையத்தை எம்.புதூரில் அமைக்க ஏற்பாடு செய்து மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு அளித்துள்ள வல்லுனர் குழு, அறிக்கை தவறான தகவலை கொடுக்கிறது. இதை திரும்ப பெற வேண்டும். தற்போதைய பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும்.
கொண்டங்கி ஏரி அருகில் பஸ் நிலையம் அமைப்பதால் மாசுபடும் என்பதால் 4 கிலோ மீட்டர் அருகில் எதுவும் அமைக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாய விதி உள்ளது.
இதை பஸ் நிலையம் அமைப்பதால் மீறுவதாக இருக்கும். ஆகவே பஸ் நிலையத்தை எம் புதூருக்கு மாற்றும் முடிவை கண்டித்து அனைத்துக்கட்சிகள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கம் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகல் எரிப்பு போராட்டம்
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், பக்கீரான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மூர்த்தி, குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், ம.தி.மு.க. சேகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் இஸ்மாயில், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், மனிதநேய ஜனநாயக கட்சி மன்சூர், மக்கள் அதிகாரம் பாலு, கடலூர் மாநகர அனைத்து பொதுநல சங்கங்களின் தலைவர் ரவி, மீனவர் பேரவை சுப்புராயன், கடலூர் அனைத்து பொதுநல இயக்க தலைவர் குமார், விடுதலை வேங்கை மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கை நிறைவேறாவிட்டால், மாநகராட்சி நகல் தீர்மானத்தை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.