அரசு கல்லூரி முன்பு தாயுடன் மாணவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி அரசு கல்லூரி முன்பு தாயுடன் மாணவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் சாலாமேட்டில் அரசு எம்.ஜி.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்காக 4 கட்டங்களாக மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சேர்க்கை செய்யப்படாமல் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சேர்க்கை செய்யப்பட்டதாகவும், மாணவிகள் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாகவும் பெற்றோர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுந்தன.
தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில் மாணவிகள் சேர்க்கைக்காக நேற்று மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோருடன் கல்லூரிக்கு வந்தனர். அப்போது சேர்க்கை முடிந்துவிட்டதாக கூறியதால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற மாணவி, தனது தாய் தமிழ்செல்வி, உறவினர் ஸ்ரீதர் ஆகியோருடன் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து சென்று மாணவி பிரவீனா உள்ளிட்ட 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், கல்லூரிக்கு விரைந்து வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடவடிக்கை
அப்போது மாணவியின் தாய் தமிழ்செல்வி கூறுகையில், எனது மகள் பெற்ற மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற சில மாணவிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. நான் ஆடு மேய்க்கும் தொழில் செய்வதால் எனது மகளை தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளேன். எனவே அரசு கல்லூரியில் எனது மகளுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை கேட்டறிந்த போலீசார், இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அரசு கல்லூரி முன்பு மாணவி, பெற்றோருடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.