தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்புதீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏரளாமானவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர்.
அப்போது விளாத்திகுளத்தைச் சேர்ந்த பத்மாவதி தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த டீசலை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விரைந்து சென்று, பத்மாவதியிடம் இருந்த டீசல் கேனை பறித்து, அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பத்மாவதி, அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், இந்த கடனுக்கு ரூ.88 ஆயிரம் வரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தனராம். இதனால் பத்மாதேவி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர. கலெக்டர் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.