தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை கேட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் அருகே உள்ள கீழவாகைகுளத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள். மாற்றுத்திறனாளி. இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அந்த பெண்ணை மனு கொடுப்பதற்காக கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.
வேலை வழங்க வேண்டும்
அங்கு கலெக்டரிடம் அவர் கொடுத்த மனுவில், கடந்த 8.9.22 அன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேலை வழங்கக்கோரி மனு கொடுத்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து பணி வழங்க அறிவுறுத்தினார். ஆனாலும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. என் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் எனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எனது ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
புதூர் அருகே உள்ள குமாரசித்தன்பட்டியை சேர்ந்த விவசாயி மயில்ராஜ் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "நான் பயிர் காப்பீடு செய்வதற்காக பொது சேவை மையத்தில் எனது ஆவணங்களை கொடுத்து இருந்தேன். அப்போது, எனது ஆவணங்களை வைத்து முறைகேடாக பொது சேவை மையத்தை சேர்ந்தவர் பெயரிலும் பயிர் காப்பீடு செய்து உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பொது சேவை மையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "எங்கள் பகுதி மக்களின் வேலைவாய்ப்புக்கு ஆதாரமாக விளங்கிய ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும். நாங்கள் அந்த தொழிற்சாலையில் நீண்டகாலமாக வேலை பார்த்து உள்ளோம். ஆனால் எந்த நோயும் ஏற்படவில்லை. படித்து வேலைவாய்ப்பு இல்லாத பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவும், ஸ்டெர்லைட் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில் நிறுவனங்கள் செயல்படவும், முடங்கிய தொழில்கள் மீண்டும் செயல்பட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் மாவட்ட தலைவர் பிரிசில்லா என்ற பிச்சம்மாள் தலைமையில் கழகத்தினர் கொடுத்த மனுவில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் ஆலையை விற்பனை செய்வதாகவும் அறிவிப்புகள் வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நிறுவனம், நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு செலவு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர். ஆகையால் தூத்துக்குடி மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆலையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளனர்.
கூட்டத்தில் பணி நியமன ஆணையையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.