உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. வார்டு கவுன்சிலருடன் தகராறு; மோட்டார் சைக்கிள் சேதம்:நிலபுரோக்கருக்கு போலீசார் வலைவீச்சு
உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. வார்டு கவுன்சிலருடன் தகராறு செய்து மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய நிலபுரோக்கரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. வார்டு கவன்சிலருடன் தகராறு செய்து, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய நிலபுரோக்கரை போலீசார் தேடிவருகின்றனர்.
பேரூராட்சி கவுன்சிலர்
உடன்குடி கிறிஸ்தியாநகரத்தை சேர்ந்தவர் ஜான்பாஸ்கர்(வயது 62). இவர் பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலராவார். பேரூராட்சியின் முன்னாள் துணைத்தலைவராகவும், உடன்குடி நகர முன்னாள் தி.மு.க. செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கும், நிலபுரோக்கரான உடன்குடி முகைதீன் புதுத்தெருவை சேர்ந்த ஜூனைதீன் மகன் அப்துல் ஹமீதுக்கும் இடையே ஒரு பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று காலையில் வார்டு பிரச்சினை சம்பந்தமாக செயல் அலுவலரை சந்திக்க ஜான்பாஸ்கர் மோட்டார் சைக்கிளில் பேரூராட்சி அலுவலகத்துக்கு ெசன்றார்.
தகராறு
அப்போது அந்த அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த அப்துல் ஹமீது மற்றும் சிலர் ஜான்பாஸ்கருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் ஜான்பாஸ்கரின் மோட்டார் சைக்கிளை அப்துல் ஹமீது இரும்பு கம்பியால் அடித்து சேதப்படுத்தி உள்ளார். பின்னர் அவர் காரில் ஏறி தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
வலைவீச்சு
இது குறித்து ஜான் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ஹமீதை தேடிவருகின்றனர்.