அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்


அரசு அலுவலகங்களில்  அலுவலர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்:  கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

மின்சார சிக்கன வாரவிழா

தூத்துக்குடியில் நகர் உபமின்நிைலயத்தில் நேற்று மின்சார சிக்கன வார விழா நடந்தது. விழாவினை முன்னிட்டு அங்கிருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி புறப்பட்டது. மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில் நடந்த இந்த பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மின்சார துறையின் பங்கு

மழை, புயல், இடி மின்னலுடன் கூடிய எந்த ஒரு பேரிடர் காலங்களிலும் தயார் நிலையில் இருக்கக்கூடிய ஒரே துறை மின்சார வாரிய துறை தான். இந்த காலங்களில் முன்னால் செல்வதும் இந்த துறைதான். அனைத்து நிவாரணப்பணிகளும் முடிந்து கடைசியாக அந்த பகுதியில் இருந்து வெளியேறுவதும் மின்சார துறைதான். அந்த அளவுக்கு மின்சாரத்துறையினரின் பணி மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

மின்சார உற்பத்தியில் நிலக்கரி தான் முக்கிய அங்கம் வகிக்கிறது. தற்போது இந்த நிலக்கரியை ஏற்றுமதி செய்வதும், இறக்குமதி செய்வதும் குறைந்த அளவில் இருந்து வருகிறது. அடுத்து 50 ஆண்டுகளில் நிலக்கரி மற்றும் லிக்னைட் போன்ற மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

அலுவலகங்களில் மின்சிக்கனம்

நிறைய இடங்களில் குறிப்பாக அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது இல்லை. நாம் எப்படி நமது சொந்த வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றோமா, அதே போல் நமது அலுவலகத்திலும் பயன்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அலுவலகங்களிலும் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களும் வீடுகளிலும் மின்சாரத்தினை சிக்கனமாக செலவிட வேண்டும். மின்சார சிக்கனம் என்பது நம்முடைய வீட்டிற்கு மட்டுமல்ல நமது நாட்டிற்கும் அவசியம் ஆகும். ஆகையால் மின்சாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். நாம் எவ்வளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நம்மால் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு உதவ முடியும். இவ்வாறு அவர் பேசினார். பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் உபமின்நிலையத்தை வந்தடைந்தது.

கலந்து கொண்டவர்கள்

இந்த பேரணியில் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள், அலுவலர்கள், காமராஜ் கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, புனித மரியன்னை கலை கல்லூரி மற்றும் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story