அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிகமாக நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள் கல்வித்தரத்தை உயர்த்துமா? சமூக ஆர்வலர்கள் கருத்து


அரசு பள்ளிக்கூடங்களில்  தற்காலிகமாக நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள் கல்வித்தரத்தை உயர்த்துமா?  சமூக ஆர்வலர்கள் கருத்து
x
தினத்தந்தி 28 Jun 2022 11:15 PM IST (Updated: 4 July 2022 8:51 AM IST)
t-max-icont-min-icon

தற்காலிகமாக நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள் கல்வித்தரத்தை உயர்த்துமா?

ஈரோடு

அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிகமாக நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்களால் கல்வித்தரம் உயருமா? என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முடிவு எடுத்து உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஏற்கனவே 8 ஆயிரத்து 462 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டு உள்ளன. தற்போது இந்த பணியிடங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் 2024-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

பற்றாக்குறை

இதற்கிடையே புதிதாக 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் உத்தரவும் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது தெளிவாகிறது.

ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரிய-ஆசிரியைகள் தங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா? என்று தினந்தோறும் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் முடிவுக்காக காத்து இருக்கிறார்கள். இந்தநிலையில் 21 ஆயிரத்து 793 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடமாக இருக்கிறது என்பது சற்று முரணாகத்தான் உள்ளது. ஏற்கனவே சுமார் 3 ஆண்டுகள் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வரும் ஆசிரிய-ஆசிரியைகள் இன்னும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரம் புதிதாகவும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நம்பிக்கை

கடந்த 2004-ம் ஆண்டு இதுபோன்று ரூ.4 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரிய-ஆசிரியைகள் 2006-ம் ஆண்டுக்கு பின்னர் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

எனவே கடந்த ஆட்சியில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், கணினி, உடற்கல்வி, தையல் உள்ளிட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்வார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தற்காலிக மற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் நம்பிக்கை வீணாகி விட்டது. மீண்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்பது கல்வித்துறைக்கு சாதகமாக அமையாது.

கல்வித்தரம்

மாணவ-மாணவிகளுக்கு கற்பித்தல் பணி செய்யும் ஆசிரிய-ஆசிரியைகள் மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக கற்றுக்கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும். இதற்காகத்தான், கடந்த ஆட்சி காலங்களில் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டன. இன்னும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள் பெறவில்லை என்றாலும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகம் என்ற ஒரு பிரசாரம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்காலிக ஆசிரியர்கள், நிரந்தர ஆசிரியர்கள் இடையே பனிப்போர் உருவாகும். இது பள்ளிக்கூடத்துக்கும், மாணவ-மாணவிகளின் கல்விக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வருங்கால சமூகத்தை கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர் பணி சமீப காலமாக புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணியாக மாறி உள்ளது. தற்காலிக ஆசிரியர்களும் இந்த பணிகளை செய்யும் போது கண்டிப்பாக கல்வி தரம் உயராது. தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தும் நிலை மட்டுமே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லஞ்சம்

தற்காலிக பணியிடங்களை அரசு நேரடியாக நியமனம் செய்தால், பணியில் சேருபவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனால், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிமேலாண்மைக்குழுவில் முக்கிய பங்காற்றுபவர்கள் கவுன்சிலர்கள். அவர்கள் ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் லஞ்சம் வாங்கும் நிலை கூட ஏற்படும்.

பணி நிரந்தரமற்ற ஒரு வேலையை நம்பி, ஆசிரியர்கள் லஞ்சம் கொடுத்து ஏமாற்றம் அடையும் நிலை வரும். எனவே பள்ளி மேலாண்மைக்குழு மூலம் ஆசிரியர் நியமனம் சரியா? என்பதையும், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கல்வித்தரத்தை உயர்த்த முடியுமா? என்பதையும் அரசு ஆய்ந்து அறிய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கெஞ்சும் நிலை

தற்காலிக பணியிடங்கள் 13 ஆயிரத்து 331 என்று அறிவித்து விட்டனர். மாவட்ட வாரியாகவும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் எந்தெந்த பள்ளிக்கூடங்களில் காலியிடம் உள்ளது என்ற அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதனால், எதிர்கால நம்பிக்கையுடன் பணிக்கு காத்திருக்கும் ஆசிரிய-ஆசிரியைகள் தங்களுக்கு தெரிந்த பள்ளிக்கூடங்களில் எல்லாம் விண்ணப்பங்கள் அளித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து எப்படியாவது வேலை தாருங்கள் என்று கெஞ்சுவது பரிதாபமாக உள்ளது. எதிர்கால சிற்பிகளாக மாணவ-மாணவிகளை உருவாக்கும் ஆசிரிய-ஆசிரியைகள் தங்கள் தற்காலிக பணிக்கே கெஞ்சும் நிலை என்பது ஏற்க கூடியது இல்லை.

எனவே மாவட்ட வாரியாக எந்தெந்த பள்ளிக்கூடங்களில் காலிப்பணியிடம் உள்ளது என்பதை அறிவித்து, விண்ணப்பங்கள் பெறுவது தேவையற்ற மனஉளைச்சலை தவிர்க்கும். மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக பணியாற்றும் ஆசிரியர்களை அந்தந்த பள்ளிக்கூடங்களின் அருகில் தேர்வு செய்தால் மட்டுமே ஓரளவு திருப்தியுடன் பணியாற்றுவார்கள். இல்லை என்றால் கடமைக்கு பணியாற்றும் நிலைதான் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


Next Story