பூம்புகார் அரசு கல்லூரியில்3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பூம்புகார் அரசு கல்லூரியில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்காடு:
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பூம்புகார் அரசு கல்லூரியில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் கல்லூரி (தன்னாட்சி) உள்ளது. இந்த கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதற்குரிய தரச்சன்றை புதுப்பிக்க கோரியும், கல்லூரி வளர்ச்சி நிதிக்கு வந்த நிதியை கையாடல் செய்த கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து 2 நாட்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கல்லூரிக்கு விடுமுறை விடபட்டது. மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக நேற்று முன்தினம் சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்டோர் கல்லூரியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
முற்றுகை
இதனிடையே கல்லூரி முதல்வர் அறிவொளி கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவி கலெக்டர் அர்ச்சனா, இந்து சமய அறநிலையத்துறை சென்னை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா, மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பூம்புகார் கல்லூரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி முதல்வரை பணிமாற்றம் செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறிய மாணவர்கள், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியாவை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
பின்னர் கூடுதல் ஆணையர் மாணவர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டத்தையொட்டி பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோர் போலீசார் அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.