அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலீசார் விசாரணை
திண்டுக்கல்லில், பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தை உடல் மீட்பு
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின், அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் உள்ள கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியில் பிறந்து ஓரிரு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் தலை, நெஞ்சு, கை, கால் பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்ததால் சுவற்றில் அடித்து அந்த பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். மேலும் குழந்தையின் தாய் குறித்தும் மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அது தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தீவிர விசாரணை
அப்போது சந்தேகப்படும்படி ஒரு பெண் அவசர சிகிச்சை பிரிவு முன்பு நிற்பதை பார்த்த போலீசார் அந்த பெண் குறித்து விசாரித்தனர். ஆனால் அதிலும் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் கடந்த 21, 22-ந்தேதிகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை சேகரித்தனர். அதில் அன்றைய தினம் 51 குழந்தைகள் பிறந்திருப்பதும், அந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் குறித்தும், அவர்களில் எத்தனை பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளன?, அவர்களில் யாரேனும் ஆரம்ப சுகாதார நிலையத்தைவிட்டு மாயமாகி இருக்கிறார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடு, வீடாக சென்று கர்ப்பிணிகள் குறித்து கணகெடுப்பு நடத்தும் சமூகநல விரிவாக்க அலுவலர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய் போலீசாரிடம் சிக்கினால் மட்டுமே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.