அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பாக கூட்டு மாதிரி ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது.
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பாக கூட்டு மாதிரி ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது. இதில் தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டோ அலுவலர்கள் அருண்குமார் சவுஹான், ராகுல்குமார் ஆகியோர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு, தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. கட்டிடங்களில் சிக்கி இருப்பவர்களை கயிறு கட்டி மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்தல், ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தல் போன்றவை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. இதில், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் ஆர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.