தேனியில்பருப்பு மில்லில் ரூ.7 லட்சம் கையாடல்:கணக்காளர் உள்பட 3 பேர் கைது
தேனியில் பருப்பு மில்லில் ரூ.7 லட்சம் கையாடல் செய்த கணக்காளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தேனி நகர் பெரியகுளம் சாலையில் ஒரு பருப்பு மில் உள்ளது. இந்த மில்லில் மேலாளராக வேலை பார்க்கும் கணேசன் (வயது 36) என்பவர் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், 'நான் மேலாளராக பணியாற்றும் மில்லில் அரண்மனைப்புதூரை சேர்ந்த தமிழன் என்ற மகேஸ்வரன் (47), திருமலை நகரை சேர்ந்த கதிர்வேல் மகன் சரவணன் (20) ஆகியோர் பொருட்கள் வினியோக பிரிவு ஊழியர்களாகவும், தர்மாபுரியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராசா (37) கணக்காளராகவும் வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் 3 பேரும், பருப்பு மில் மூலம் ஏற்கனவே வினியோகம் செய்த ரசீதுகளை வைத்து, வேறு நபர்களுக்கு பொருட்களை வினியோகம் செய்து ரூ.7 லட்சம் கையாடல் செய்து விட்டனர். இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி விசாரணை நடத்தினார். அதன்பேரில் தமிழன், சரவணன், ராசா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.