தேனியில் கியாஸ் கசிவால் தீ விபத்து; தாய்-மகன் படுகாயம்
தேனியில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.
தேனி பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி ரம்யா (வயது 43). இவருடைய மகன் ராஜேஷ்கண்ணா (23). நேற்று முன்தினம் ராஜேஷ்கண்ணா வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ரம்யா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை திறந்துள்ளார். ஆனால், அதை சரியாக அடைக்காமல் வாசலில் தண்ணீர் தெளிக்க வெளியே சென்றார். மீண்டும் வீட்டுக்கு வந்து மின்விளக்கை எரியச் செய்தபோது கியாஸ் கசிவால் தீப்பற்றியது.
இதில், ரம்யா, ராஜேஷ்கண்ணா இருவரின் உடலிலும் தீப்பற்றியது. அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து இருவரையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜேஷ்கண்ணா கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.