தேனியில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி


தேனியில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி
x

தேனியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி

அரசு வேலை

தேனி சுப்பன் தெருவை சேர்ந்தவர் ஹரிராமமூர்த்தி (வயது 62). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம் லத்துவாடியை சேர்ந்தவர் சக்திவேல் (50). இவர், கடந்த 2007-ம் ஆண்டு தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் வசித்து வந்தார். எனது குடும்ப நண்பர்கள் மூலம் அவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர் எனது வீட்டுக்கு வந்தார்.

எனது மகள் சாலினி குறித்து விசாரித்தார். அவர் ஆசிரியர் பயிற்சிக் கல்வி படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருப்பதாக கூறினேன்.

அதற்கு சக்திவேல் தனக்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரை தெரியும் என்றும் அவர்கள் மூலம் எனது மகளுக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.

ரூ.7½ லட்சம் மோசடி

அதற்கு ரூ.8 லட்சம் செலவு ஆகும் என்றும் கூறினார். அதனை நம்பிய நான் அவரிடம் 7 தவணையாக ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்தை கொடுத்தேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் 6 மாத காலத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறினார். ஆனால் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்தார். இப்போது அவர் தலைமறைவு ஆகிவிட்டார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், மோசடி செய்த சக்திவேல் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story