புனித வியாழனை முன்னிட்டுகிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
புனித வியாழனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தூத்துக்குடி சின்னக்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு முதியவர்களின் பாதத்தை கழுவினார்.
புனித வியாழனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தூத்துக்குடி சின்னக்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு முதியவர்களின் பாதத்தை கழுவினார்.
தவக்காலம்
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் தினத்துடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் முழுவதையும் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று புனித வியாழன் கடைபிடிக்கப்பட்டது. ஏசுகிறிஸ்து யூதர்களிடம் பிடிபடுவதற்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுடன் கடைசி இரவு விருந்தில் பங்கேற்றார். அப்போது தனது சாவை முன்னறிவித்த ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவர்களுக்கு ரொட்டித் துண்டுகளை வழங்கியதாக பைபிளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதம் கழுவும் நிகழ்ச்சி
இதனை நினைவு கூறும் வகையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயஙகளிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தூத்துக்குடிசின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது முதியவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவர்களுக்கு ரொட்டிகளை பிஷப் வழங்கினார். நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) ஏசு உயிர் நீத்த தினமான புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடக்கின்றன. இதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஏசு உயர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கோவில்பட்டி
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் பெரிய வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் அடிகளார், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் டாக்டர் லியோனி, உதவி பங்குத்தந்தை மகேஷ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றி 12 அப்போஸ்தலர்களின் பாதங்களை கழுவி, முத்தமிட்டு பணி செய்தனர். பின் நற்கருணை இடமாற்ற பவனி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் ஆலயத்தில் சிறப்பு ஜெபம் நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.