ஓசூர் பகுதியில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பசுமை குடில்களில் கருகும் ரோஜா மலர்கள்-செடிகளில் தண்ணீரை தெளித்து காப்பாற்ற போராடும் விவசாயிகள்


ஓசூர் பகுதியில் உள்ள பசுமை குடில்களில் கடும் வெயிலால் ரோஜா பூக்கள் செடியிலேயே காய்ந்து கருகி வருகின்றன. செடிகளில் தண்ணீரை தெளித்து செடிகளை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

பசுமை குடில்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில்கள் அமைத்து பல்வேறு வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு, காதலர் தினம், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்திற்காக ரோஜா மலர்கள் ஓசூர் பகுதிகளில் இருந்து உள்நாடு வியாபாரம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் லாபம் ஈட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் ஓசூர் பகுதியில் தற்போது வழக்கத்தை விட கோடை வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் பசுமை குடில்களில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

பசுமை குடில்களில் 84 டிகிரி வரை வெப்பநிலை இருக்க வேண்டும். அப்போது தான் தரமான ரோஜா மலர்களை சாகுபடி செய்ய முடியும், ஆனால் கடும் வெயில் காரணமாக தற்போது பசுமை குடில்களில் 100டிகிரி வரை வெப்பம் உள்ளது.

தண்ணீர் தெளிப்பு

இந்த கடுமையான வெப்பத்தால் பசுமை குடில்களில் வளர்க்கப்பட்டு வரும் ரோஜா மலர்கள் செடிகளிலேயே காய்ந்து கருகி வருகின்றன. இதனால் மலர் விவசாயிகளால் தரமான மலர்களை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செடிகளில் காய்ந்து கருகும் ரோஜா மலர்களை பறித்து விவசாயிகள் அதனை குப்பைகளில் கொட்டி வருகின்றனர்.

பசுமை குடில்களில் வளர்க்கப்பட்டு வரும் ரோஜா செடிகளில் வெப்பத்தை தணிக்கும் வகையில் ரோஜா செடிகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் விவசாயிகள் தினந்தோறும் தண்ணீரை தெளிப்பான் மூலம் தெளித்து வருகின்றனர். தற்போது கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ரோஜா மலர்களின் தேவை அதிகமாக இருந்து வரும் நிலையில், ஓசூர் பகுதி விவசாயிகள் வெப்பத்தின் காரணமாக தரமான ரோஜா மலர்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விலை அதிகரிப்பு

கடந்த மாதம் வரை ரோஜா மலர்களின் விலை மிக குறைந்து காணப்பட்டது. 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 30 ரூபாய் வரை விலை இருந்தது. இந்த நிலையில் தற்போது கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக அதிகளவில் மலர்கள் தேவை இருப்பதால் ரோஜா பூக்கள் விலை ஒரு கட்டு 80 ரூபாய் வரை அதிகரித்து அதன் தேவைகளும் அதிகரித்துள்ளது.

ஆனால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் ஓசூர் பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


Next Story