இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது; நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பேட்டி
“இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மனித உரிமை ஆணையம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது” என்று மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கூறினார்.
"இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மனித உரிமை ஆணையம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது" என்று மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கூறினார்.
வழக்கு விசாரணை
மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் மனித உரிமை ஆணைய நீதிபதியாக கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்றேன். அடுத்த மாதம் (நவம்பர்) 1- ந்தேதியுடன் பதவி காலம் முடிவடைகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் புகார் அடிப்படையில் பெறப்பட்டு ஆரம்ப நிலையிலேயே 10,448 வழக்குகள் விசாரணைக்கு தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டது. 8,030 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை அடிப்படையில் முடிவு பெற்றுள்ளது. 2,055 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது போடப்பட்ட 828 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 406 வழக்குகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்று சுகாதாரத்துறையில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக 35 வழக்குகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைக்காகவும், இழப்பீடு தொகை வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வருவாய் துறையில் 14 வழக்குகள், மாநகராட்சிகள் மீது 5 வழக்குகள், மின்வாரியம் தொடர்பாக 5 வழக்குகள் ஆகியவை விசாரிக்கப்பட்டு அரசின் பரிந்துரைக்கு உத்தரவிடப்பட்டது.
சிறப்பான செயல்பாடு
மாநில மனித உரிமை ஆணையம் குறித்து பொதுமக்களிடம் தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 புகார்கள் ஆணையத்திற்கு வருகிறது. மனித உரிமை ஆணையம் மற்ற மாநிலங்களில் உயர் அதிகரிகள் பரிந்துரையுடன் முடிந்துவிடும்.
ஆனால் தமிழகத்தில் மனித உரிமை ஆணையம் ஒரு நீதிமன்றம் போல் செய்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாநில மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.