கடம்பூர் வனப்பகுதியில் கடமானை கொன்ற சிறுத்தைப்புலி
கடம்பூர் வனப்பகுதியில் கடமானை சிறுத்தைப்புலி கொன்றது.
டி.என்.பாளையம்
கடம்பூர் வனப்பகுதியில் கடமானை சிறுத்தைப்புலி கொன்றது.
இறந்து கிடந்த கடமான்
டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்ெடருமை, மான் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் சோதனைச்சாவடியில் இருந்து கடம்பூர் செல்லும் ரோட்டில் சாலையோரம் கடமான் ஒன்று நேற்றுக்காலை இறந்து கிடந்து உள்ளது. இதை கண்டதும் அந்த வழியாக ெசன்றவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த கடமானை பார்வையிட்டனர். அப்போது அந்த கடமான் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது. மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் சிறுத்தைப்புலியின் கால் தடம் இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
சிறுத்தைப்புலி கடித்து...
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'நேற்று முன்தினம் இரவில் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கடமானை வேட்டையாடுவதற்காக சிறுத்தைப்புலி துரத்தி வந்து உள்ளது. சிறுத்தைப்புலிக்கு பயந்து ஓடிய கடமான் அங்குள்ள சாலையை கடக்க முயன்று உள்ளது. ஆனால் அதற்குள் கடமானை கடித்து சிறுத்தைப்புலி கொன்று விட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏதாவது ஒரு வாகன வெளிச்சம் காரணமாக கடமானை சாலையோரம் போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சிறுத்தைப்புலி சென்று இருக்கலாம். இறந்து கிடந்தது 3 வயது உடைய பெண் கடமான் ஆகும்,' என்றனர். இதைத்தொடர்ந்து கடமானை வனவிலங்குகளுக்கு உணவாக வனப்பகுதியில் வீசிவிட்டு வனத்துறையினர் சென்றனர்.