கம்பம் நகராட்சியில்தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
கம்பம் நகராட்சியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள்
கம்பம் நகராட்சியில் சுமார் 120 தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பழைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ஒப்பந்த நிறுவனம் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வாங்க வேண்டும் என்று துய்மை பணியாளர்களை வலியுறுத்தி வருகிறது. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து பணிச்சுமையை குறைக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டம்
இதற்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் தூய்மை பேரவை கம்பம் நகரச் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் மூலம் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி சுமுக முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பாலமுருகன் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் நேரடியாக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. நகர் பகுதிகளில் குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும். அகற்றாவிட்டால் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.