கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
குடிநீர் பற்றாக்குறை
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைத்து வரும் தண்ணீரும், பொதுமக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், அவ்வப்போது கிடைத்து வந்த தண்ணீரும் கடந்த 10 நாட்களாக வருவதில்லை. அந்த தண்ணீர் செல்லும் வழியிலுள்ள திங்களூர் அருகே பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கொடிவேரி தண்ணீரும் பெருந்துறைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட திருவேங்கிடம்பாளையம், திருவேங்கிடம்பாளையம்புதூர், கொங்கு நகர், சீலம்பட்டி, எல்லப்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் கூறும்போது, 'தொடர்ந்து 10 நாட்கள் வரை குடிநீர் வினியோகம் இல்லாததால், வாரம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் தண்ணீருக்கு செலவு செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு்ள்ளோம். இதனால் எங்களது அன்றாடத் தேவைக்கு லாரி மற்றும் டிராக்டர்களில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுபற்றி தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டு வருகிறோம்' என்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, 'காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும், பெருந்துறை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அமைந்துள்ள ஆற்றுப்படுகை நீரேற்று கிணறுகளில், ஆகாயத் தாமரை மற்றும் நீர் நிரம்பியதாலும், மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் ஏற்பட்டு வருகிறது' என்றனர்.