கருங்கல்பாளையத்தில் கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு


கருங்கல்பாளையத்தில்  கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு
x

ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது.

கரைபுரண்டோடும் வெள்ளம்

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரின் அளவு உயர்ந்து வந்ததால் மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் அப்படியே காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வழக்கமாக பாறைகளுடன் காட்சி அளிக்கும் காவிரி ஆறு ஒரு இடத்தில் கூட பாறைகள் தெரியாத வகையில் தண்ணீர் அலையடித்துக்கொண்டு பாய்ந்து சென்றது. பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் பிரமாண்ட சிலை மட்டும் தெரியும் அளவில் தண்ணீர் செல்கிறது.

கண்காணிப்பு

கருங்கல்பாளையம் காவிரியை ஒட்டி இருக்கும் பழமையான கோவிலை தண்ணீர் முழுமையாக சூழ்ந்து உள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் தண்ணீரின் அளவு மாறிக்கொண்டே இருந்தது. எனவே ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தாசில்தார் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அதிகாரிகள் காவிரிக்கரையில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் பழைய பாலத்தை ஒட்டிக்கொண்டு தண்ணீர் வேகம் எடுத்து செல்கிறது. மணல்வெளிகள் சிறிதும் தெரியாத அளவுக்கு வெள்ளம் பிரவாகம் எடுத்துச்சென்றது. முனியப்பன்நகர் பகுதிக்கு செல்லும் ரோட்டில் தண்ணீர் வடியாததால் அவர்களுக்கு தனியார் தோட்டம் வழியாக தற்காலிக நடைபாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

பாதுகாப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் ஏராளமானவர்கள் தண்ணீரை வேடிக்கை பார்க்க குவிந்தனர்.

அவர்கள் வழக்கம்போல செல்போன்களில் தன்படம் (செல்பி) எடுத்தும் மகிழ்ந்தனர். பாலத்தையொட்டி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

நேற்று முன்தினம் மழை பெய்து கொண்டே இருந்ததால் ஆற்றில் ஓடும் தண்ணீரின் அளவு உயர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் நேற்று மழை இல்லாததால் ஆற்றில் தண்ணீரின் அளவு மிக வேகமாக அதிகரிக்கவில்லை. இதனால் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் காவிரியில் வெள்ளப்பெருக்கை பார்க்க பொதுமக்கள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே காவிரிக்கரையில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் பணியில் அமர்த்த வேண்டியது அவசியமாகும்.


Next Story