கரூரில், லாரி மீது கல்லூரி பஸ் மோதி 15 மாணவிகள் காயம்


கரூரில்,  லாரி மீது கல்லூரி பஸ் மோதி 15 மாணவிகள் காயம்
x

கரூர் வெண்ணைமலை பகுதியில் லாரி மீது கல்லூரி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 மாணவிகள் காயமடைந்தனர்.

கரூர்

கல்லூரி பஸ்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் விவேகானந்தா மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கரூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கல்லூரி சார்பாக பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து கல்லூரி பஸ்சில் தினமும் மாணவிகள் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கல்லூரி பஸ் கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக்கொண்டு திருச்செங்கோடு சென்று கொண்டிருந்தது. பஸ்சை தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த டிரைவர் மகேஷ் (வயது 43) ஓட்டி சென்றார்.

15 மாணவிகள் காயம்

அப்போது வெண்ணைமலை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, கரூருக்கு அரிசி மூட்டை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 15 மாணவிகள் காயமடைந்தனர். மேலும் பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து சேதமானது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதுகுறித்து வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் காயமடைந்த 15 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் ஐந்துரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வெங்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story