கரூரில், வண்ண கோலப்பொடிகளின் விற்பனை படுஜோர்
மார்கழி மாதத்தையொட்டி கரூரில், வண்ண கோலப்பொடிகளின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
வண்ண கோலங்கள்
தமிழகத்தில் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலமிடுதல் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டு வாசலில் கோலமிட்டாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை பொழுதில் கோலமிடுவதைபெண்கள் ஐதிகமாக கொண்டு உள்ளனர். மேலும், அதிகாலையில் ஆக்சிஜன் நிறைந்து இருக்கும் என்பதால் கோலம் போடும் பெண்களின் உடல் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
விற்பனை படுஜோர்
இதனால் கரூர் ஈஸ்வரன்கோவில் வீதி, லைட்ஹவுஸ், மார்க்கெட், தாந்தோணிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரக்கு வாகனங்களிலும், சிலர் சாலையோரங்களிலும், தற்காலிக கடைகள் அமைத்தும் கோலப்பொடியை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வண்ண கோலப்பொடிகளைஅதிக அளவில் தேடி சென்று வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதில் மஞ்சள், ஆரஞ்சு, நீலம், ஊதா, கருப்பு, வெள்ளை உள்ளிட்ட 15 வகையான வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விற்பனை நன்றாக உள்ளது
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நாகரிக மோகம் அதிகரித்து வந்தாலும் கோவில் திருவிழா, தீபாவளி, புத்தாண்டு, உள்ளிட்ட முக்கிய தினங்களில் கோலமிடுவது மங்களகரமாக கருதப்படுகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதாலும் கோலமிடுவதற்கு பெண்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை நன்றாக உள்ளது என்றனர்.