காட்பாடியில் ரூ. 30 கோடியில் புதிய அரசு ஆஸ்பத்திரி


காட்பாடியில் ரூ. 30 கோடியில் புதிய அரசு ஆஸ்பத்திரி
x

காட்பாடியில் ரூ.30 கோடியில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும் எனவும், வேலூர் பென்ட்லென்ட் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வேலூர்

காட்பாடியில் ரூ.30 கோடியில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும் எனவும், வேலூர் பென்ட்லென்ட் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி முகாம்

வேலூர் மாவட்டத்தில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு மற்றும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று (நேற்று) 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் 96.99 சதவீதம் பேரும், 2-வது டோஸ் 89.5 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். இன்னும் 3.50 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதனை இலக்காக கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் தடுப்பூசி செலுத்தும் பணியில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது.

6 புதிய மருத்துவ கல்லூரிகள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க இருக்கிறோம். அப்போது கோவை, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் குறித்தும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தேவைப்படுகிறது. இது குறித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.

மேலும் தடுப்பூசி தேவை குறித்து தெரிவிக்க இருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளன. ஒரு சிலர் மருந்து இல்லை என கற்பனை கதையை சொல்லி வருகின்றனர். ஒரு சில இடங்களில் 4 வகை மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அதுவும் சரியாகி விட்டது. அரசு ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை என கூறி பொதுமக்களை வெளியே அனுப்புவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தக்காளி காய்ச்சல்

சுகாதார துறையில் மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட 4,308 காலி பணியிடங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பு இல்லை. இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 85 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

காட்பாடியில் மருத்துவமனை

அமைச்சர் துரைமுருகன் தொகுதியான காட்பாடியில் ரூ.30 கோடியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு அடிக்கல் நாட்டப்படும். மேலும் பென்ட்லேண்டு மருத்துவமனையும் தரம் உயர்த்தும் பணி தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், நகர்நல அலுவலர் முருகன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.


Next Story