கவுந்தப்பாடியில்சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


கவுந்தப்பாடியில்சிறுமிக்கு பாலியல் தொல்லை;  தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
x

கவுந்தப்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஈரோடு

கவுந்தப்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

கவுந்தப்பாடியை சேர்ந்தவர் அக்பர் (வயது 55). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி சாலையோரம் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சென்று பேச்சு கொடுத்தார். அப்போது அந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்க காசு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமிக்கு அக்பர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அதன் பின்னர் அந்த சிறுமி தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

இதுபற்றிய தகவல் தெரியவந்ததும் ஈரோடு சைல்டு லைன் அமைப்பினர் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி அங்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த ஜாஸ்மின் கிரிஸ்டி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்பரை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

5 ஆண்டு சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக அக்பருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story