கயத்தாறு வட்டாரத்தில், 2023-24-ம் ஆண்டிற்குஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த 9 கிராமங்கள் தேர்வு
கயத்தாறு வட்டாரத்தில், 2023-24-ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த 9 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கயத்தாறு:
கயத்தாறு வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தீத்தாம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆ.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 கிராமங்கள்
கயத்தாறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் கடந்த இரண்டு வருடமாக 19 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டு 2023-24-ல் இத்திட்டம் தீத்தாம்பட்டி, போடுபட்டி, கன்னக்கட்டை, கொப்பம்பட்டி, வானரமுட்டி, சவலாப்பேரி, ராஜாபுதுக்குடி, குருவிநத்தம், தொட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறலாம். மேலும் அனைத்து துறைகளின் மூலம் அந்தந்த துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
தரிசு நிலத்தில்...
இத்திட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் மேற்கண்ட கிராமங்களில் குறைந்தது 8 விவசாயிகளை இணைத்து 10 முதல் 15 ஏக்கர் வரையிலான தரிசு நிலங்கள் தொகுப்பாக தேர்வு செய்யப்பட உள்ளது. வேளான் துறையின் மூலம் அந்நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி, நிலத்தை சீர்செய்து விதைப்பு பணி மேற்கொள்ள அரசு மானியம் வழங்கப்படுகிறது. அந்த தொகுப்பிற்கு உட்பட்ட தரிசு நிலத்தில் இலவசமாக ஆழ்துளை கிணறு அல்லது திறந்த வெளி கிணறு அமைத்து மின்சாரம் அல்லது சூரிய மின்சக்தி மூலம் மோட்டார் பம்ப் அமைக்கப்பட்டு கொடுக்கப்படும்.
இந்த தொகுப்பில் வரும் அனைத்து விவசாயிகளுக்கும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து நடுவதற்கு பழமரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
300 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள்
இக் கிராமங்களில் 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் இலவசமாகவழங்குவதுடன், தார்ப்பாய், பேட்டரி தெளிப்பான், பண்ணைக் கருவிகள் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பண்ணைக் குட்டைகள், சாலைகள், தடுப்பணைகள், கதிரடிக்கும் களம் போன்ற திட்டங்களும் இக்கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அல்லது கயத்தாறு, கழுகுமலை, கடம்பூரில் அமைந்துள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.