கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா- திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்
கோத்தகிரி அருகே மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மாரியம்மன் கோவில் திருவிழா
கோத்தகிரி பாக்கிய நகர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் 46 -ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றம் மற்றும் கணபதி வேள்வியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மன் அழைப்பு, அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு அலகு பூட்டுதல், பறவை காவடி, பால்குடங்களை ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊர்வலத்தில் காளி வேடமணிந்த பக்தர் ஒருவர் தனது வாயில் 5 அடி நீளமுள்ள வேலை குத்தி வந்ததும், பறவை காவடியில் பக்தர்கள் அலகு குத்தி, தொங்கியவாறு சென்றது பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
குண்டம் இறங்கிய பக்தர்கள்
தொடந்து நடைபெற்ற பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், குழந்தைகளுடன், பெண்கள் உள்பட விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலையில் உள்ளூர் மாணவ-மாணவியர் மற்றும் சிறுவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். இதையடுத்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜையும் மாவிளக்கு பூஜையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன், அம்மனை கரை சேர்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.