கோவில்பட்டியில் மது, புகையிலை பொருட்களை கடத்திய 6 பேர் கைது
கோவில்பட்டியில் மது, புகையிலை பொருட்களை கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மதுபானம், புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் சோதனை
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், சப்- இன்ஸ் பெக்டர்கள் மாதவராஜ், நாராயணசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் ரோடு தொழில் பேட்டை அருகில் வாகன சோதனை நடத்தினா். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த மாரிசாமி மகன் தடி வீராசாமி (வயது 52) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
அப்போது, மோட்டார் சைக்கிளில் 10 மது பாட்டில்கள், ஒரு மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவற்றை அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள், மது பாட்டில்கள், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கைது
இவருக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்ததாக முகமது சாலிஹாபுரதத்தை சேர்ந்த முருகன் மகன் ரத்ன மாரியப்பன் ( 54) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இனாம் மணியாச்சி பைபாஸ் ரோட்டில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பாலமுருகன் மகன் ஆறுமுக ராஜ் ( 24), சில்லாங் குளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் என்ற சண்முகையா (43), கோவில்பட்டி இந்திரா நகர் அய்யம் பெருமாள் மகன் மாரியப்பன் (40), ஒட்டநத்தம் பெருமாள் மகன் கலையரசன் (28) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 8 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.