கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கணவருடன் சென்ற மூதாட்டி பலி


கோவில்பட்டியில்  மோட்டார் சைக்கிள்கள் மோதல்;  கணவருடன் சென்ற மூதாட்டி பலி
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கணவருடன் சென்ற மூதாட்டி பலியானா். விபத்துக்கு காரணமான மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கணவருடன் சென்ற மூதாட்டி பரிதாபமாக பலியானார். விபத்தை ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கோவில்பட்டி பங்களா தெருவில் குடியிருப்பவர் அருணாச்சலம் (வயது 70). இவரது மனைவி செண்பகவல்லி (66). நேற்று முன்தினம் இரவு அருணாச்சலம் மனைவி செண்பகவல்லியுடன் புது ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அருணாச்சலமும், செண்பகவல்லியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அருணாசலம் லேசான காயத்துடன் தப்பினார்.

மூதாட்டி சாவு

செண்பகவல்லி பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செண்பகவல்லி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி அகியோர் மருத்துவமனைக்கு சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மநபருக்கு வலைவீச்சு

இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்ற மர்ம நபரை, அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடையாளத்தை கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story