கோவில்பட்டி தர்காவில் மலர் போர்வை போர்த்தி அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை
கோவில்பட்டி தர்காவில் மலர் போர்வை போர்த்தி அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை செய்தனர்.
கோவில்பட்டி:
தமிழகத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டி கோவில்பட்டி மெயின் ரோடு ஹஜ்ரத் அப்துல் அலி தர்காவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தமிழ்மகன் உசேன் கூறுகையில், 'அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொது செயலாளர் ஆக வேண்டியும், அவர் மீண்டும் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காவும் மாநிலம் முழுவதும் உள்ள 75 தர்காக்களில் நான் துவா செய்து சிறப்பு பிரார்த்தனை ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு உள்ளேன்' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி ஊரணி தெரு நகரசபை சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு வருபவர்கள், பொதுமக்கள் வசதிக்காக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அவர் திறந்து வைத்து, குடிநீரை சிகிச்சைக்கு வந்த பொதுமக்களுக்கு கொடுத்தார். நிகழ்ச்சியில் டாக்டர் ராமமூர்த்தி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி ஊரணித்தெரு அதிர்ஷ்ட வெற்றி விநாயகர், செல்வ முனீஸ்வரர் கோவில் 9-ம் ஆண்டு கொடை விழா கடந்த 16-ந்தேதி கால் நாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், தீர்த்த குடம் நிரப்புதல், பால்குடம் ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகாளய அம்மாவாசை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிர்ஷ்ட வெற்றி விநாயகர், செல்வ முனீஸ்வரர் கோவில் தலைவர் ஆபிரகாம் அய்யாதுரை தலைமையில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.