கோவில்பட்டி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
கோவில்பட்டி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அறிவிக்கப்பட்டு இருந்த கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் தாலுகா விவசாயிகள் காலை 9.30 மணிக்கு வந்திருந்தனர். பின்னர், காலை 10.30 மணிக்கு மேல் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியார், வேளாண் உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) மார்ட்டின் ராணி ஆகியோர் கூட்டத்தை தொடங்குவதாக கூறினர்.
விவசாயிகள் போராட்டம்
அப்போது உதவி கலெக்டர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் ஏராளமான விவசாயிகள் வந்துள்ளோம். ஆனால் இங்கு 20-க்கும் குறைவான இருக்கைகளே போடப்பட்டுள்ளது என புகார் தெரிவித்தனர். உதவி கலெக்டர் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை முடித்து கொண்டு விரைவில் வந்து விடுவார் என அதிகாரிகள் கூறியதை விவசாயிகள் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டரங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கூட்ட அரங்கிற்கு கிழக்கு போலீஸ் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் வந்தனர். அவர்களை பார்த்ததும் ஆத்திரமடைந்த விவசாயிகள், மீண்டும் கோஷங்கள் எழுப்பி கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூடுதல் நாற்காலிகள் போடப்பட்ட நிலையில், சுமார் 11.30 மணிக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி வந்தவுடன் கூட்டம் தொடங்கியது.
கோரிக்கை மனு
இதில் விவசாயிகள் பேசுகையில், 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். விவசாயத்துக்கு தேவையான வண்டல் மண் உள்ள குளங்களை வேளாண்மை துறையே ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும். இதே போல், தரமான விதைகள் வழங்க வேண்டும். விதைகளுக்கு உத்தரவாத அட்டை வழங்க வேண்டும். போதுமான அளவு அடிஉரம், டி.ஏ.பி. ஆகியவை இருப்பில் வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 53 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களுக்கு வருகிற செப்.8-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.