கோவில்பட்டி நகரில், புதன்கிழமை முதல் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்
கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, இன்று (புதன்கிழமை) முதல் ஒருவழிப் பாதை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, இன்று (புதன்கிழமை) முதல் ஒருவழிப் பாதை அமல்படுத்தப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கே.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ஜெகநாதன், நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் விக்னேஷ், தனியாா் பஸ், மினி பஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுனர்கள் நலச் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
ஒருவழிப்பாதை திட்டம்
கூட்டத்தில், இன்று (புதன்கிழமை) முதல் ஒருவழிப்பாதை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா் ஆகிய ஊா்களிலிருந்து வரும் பஸ்கள், எட்டயபுரம் ரோடு, கதிரேசன் கோவில் ரோடு, பாா்க் கிழக்கு ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்ல வேண்டும். கடலையூா் ரோட்டிலிருந்து வரும் மினி பஸ்களை புதுரோடு நகராட்சி பள்ளி முன்பு நிறுத்தக் கூடாது.
மதுரை மார்க்க பஸ்கள்
மதுரை, விருதுநகா் பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள், தோட்டிலோவன்பட்டி வழியாக ரெயில் நிலையம், புதுரோடு, எட்டயபுரம் ரோடு, கதிரேசன்கோவில் ரோடு, பாா்க் கிழக்கு ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்லவேண்டும்.
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள் இளையரசனேந்தல் ரோடு சுரங்க வழிப்பாதை வழியாக செல்லலாம். அங்கிருந்து வரும் பஸ்கள், மினிபஸ்கள் கூடுதல் பஸ் நிலையம், இனாம் மணியாச்சி, லட்சுமி மில் மேம்பாலம் வழியாக வர வேண்டும். நாகா்கோவில்- நெல்லை- மதுரை மாா்க்கமாக செல்லும் ஆம்னி பஸ் உள்பட அனைத்து பஸ்களும் சர்வீஸ் ரோட்டில் நின்று செல்லாமல், கூடுதல் பஸ் நிலையம் உள்ளே சென்று திரும்ப வேண்டும்.
அண்ணா பஸ் நிலையத்திலிருந்து புறவழிச்சாலைக்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இளையரசனேந்தல் ரோடு சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.