கோவில்பட்டி பள்ளியில்உலக ஆக்கிப் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி பள்ளியில் உலக ஆக்கிப் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உலக ஆக்கிப்போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜோதி லட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் என். முகமது ரியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் இந்த ஆண்டு ஆக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதை, நாம் சரித்திர சாதனையாக நினைக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் படிப்பில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்களோ, அதே அளவில் ஆக்கி விளையாட்டிலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும். விடாமல் முயற்சி எடுத்து விளையாடினால், இப்பள்ளி மாணவர்களும் தமிழ்நாடு அணியில் மட்டுமல்லாது, இந்திய அணியிலும் இடம் பெறலாம்' என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பள்ளி கமிட்டி உறுப்பினர் சாமிராஜன், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழகச் செயலாளர் குருசித்திர சண்முக பாரதி, தேசிய ஆக்கி நடுவர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.