கூடலூர் பகுதியில் தட்டைப்பயிறு கிலோ ரூ.40-க்கு விற்பனை-விவசாயிகள் மகிழ்ச்சி


கூடலூர் பகுதியில் தட்டைப்பயிறு கிலோ ரூ.40-க்கு விற்பனை-விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் தட்டைப்பயிறு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிலோ ரூ.40 வரை கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் தட்டைப்பயிறு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிலோ ரூ.40 வரை கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தட்டைப் பயிறு அறுவடை

கூடலூர் பகுதியில் கால நிலைகளுக்கு ஏற்ப விவசாய பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். ஜூன் மாதம் மழைக்காலம் தொடங்கியதும் இஞ்சி, குறுமிளகு, ஏலக்காய், வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யப்படுகிறது. தற்போது கோடை காலமாக உள்ளதால் அதற்கு ஏற்ப பாகற்காய், புடலங்காய், அவரக்காய், தட்டைப்பயிறு, பஜ்ஜி மிளகாய் உள்பட பல வகையான காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

காலநிலைக்கு ஏற்ப விவசாயம் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை கருத்தில் கொண்டு நேந்திரன் வாழைகள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்படுகிறது. இதேபோல் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷூ பண்டிகையை எதிர்பார்த்து கூடலூர் பகுதி விவசாயிகள் காய்கறி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ரூ.40 வரை விலை

நாளை சித்திரை விஷு பண்டிகை நடைபெறுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் ஏக்கர் கணக்கில் தட்டைப்பயிறு நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டினர். தொடர்ந்து பந்தல் கொடி அமைத்து உரமிட்டு நீர் பாய்ச்சி தொடர் பராமரிப்பு பணி மேற்கொண்டு வந்தனர். இதன் பலனாக தட்டைப்பயிறு விளைச்சல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பண்டிகைகளை கருத்தில் கொண்டு அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அப்போது தட்டைப்பயிறு கிலோ ரூ.40 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ரசாயன உரத்தை பயன்படுத்தினால் செடிகள் எளிதில் பாதித்து விடுகிறது. ஆனால் இயற்கை உரத்தை பயன்படுத்தினால் பயிர்கள் உயிரோட்டத்துடன் பசுமையாக காணப்படுகிறது.

இருப்பினும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. 2 மாத பராமரிப்புக்கு பிறகு தட்டைப்பயிறு அறுவடை தொடங்கலாம். சுமார் 1 ½ மாதங்கள் பயிறு அறுவடை செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பு மற்றும் சித்திரை விஷூ பண்டிகை சமயத்தில் நல்ல விலை கிடைக்கும். தற்போது ரூ.40 வரை விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story