குரும்பூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாபாரிகளின் சேமிப்பு தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்திய சேமிப்பு தொகை வியாபாரிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி

குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்திய சேமிப்பு தொகை வியாபாரிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடியில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் தந்தை பெரியார் நகர் மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் வசிக்கும் பகுதியை 1998-ம் ஆண்டு ஆதிதிராவிட நத்தம் என அறிவித்து இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டது. அதில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் தனி தாசில்தார் எங்கள் பகுதிக்கான மின்சாரத்தை துண்டித்துவிட்டு, வீட்டை இடிக்க போவதாக கடந்த 10 நாட்களாக கூறி வருகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சேமிப்பு தொகை

குரும்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவன் தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குரும்பூரை சேர்ந்த வியாபாரிகள் தினமும் ரூ.100 முதல் ரூ.1000 வரை தினசரி சேமிப்பு தொகை வசூலிக்கும் பணியாளர் மூலம் செலுத்தினர். அது போன்று சுமார் 250 வியாபாரிகள் ரூ.42 லட்சம் பணம் செலுத்தி உள்ளனர். இந்த பணத்தை கொண்டு தங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய வியாபாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால், அதன் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கலெக்டர் தலையிட்டு வியாபாரிகளின் சேமிப்பு தொகை விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஓய்வூதியம்

தமிழ்நாடு எச்.எம்.எஸ் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் பேரவைத் தலைவர் எம்.சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.


Next Story